89.4 Tamil FM

கனவுநிலையுரைத்தல்

குறள் 1 :

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

விளக்கம் :

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.

குறள் 2:

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

விளக்கம் :

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறள் 3:

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

விளக்கம் :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

குறள் 4:

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

விளக்கம் :

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

குறள் 5:

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

விளக்கம் :

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

குறள் 6:

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

விளக்கம் :

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

குறள் 7:

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

விளக்கம் :

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

குறள் 8:

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

விளக்கம் :

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.

குறள் 9:

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

விளக்கம் :

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

குறள் 10:

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

விளக்கம் :

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.